முன்னோர்கள் தங்களது வாழ்வில் கண்டுணர்ந்த அனுபவமொழிகளே பழமொழிகளாகும். இப்பழமொழிகள் வாழ்க்கைக்குப் பயனுள்ள பலகருத்துக்களை வழங்கும் வாழ்வியல் பெட்டகமாகத் திகழ்கின்றன. மனச்சோர்வு ஏற்படுகின்றபோது ஆறுதல் சொல்லும் தோழனாகவும், வாழ்க்கையினை முன்னேற்றும் ஏணிகளாகவும் இப்பழமொழிகள் திகழ்கின்றன.
முயற்சி
இன்று அனைவரும் கூறும் முதல் அறிவுரை முயற்சியே. இம்முயற்சி இன்றேல் உலக இயக்கம் இல்லை எனலாம். மேலும் இன்றைய எந்திர உலகில் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வதே அருகி வருகின்றதை நாம்பலவிடங்களிலும் காணலாம். ஒவ்வொருவருக்கும் மனதுக்குள் பலகவலைகள், பலப்பல எண்ணோட்டங்கள் உண்டு. பலருக்குத் தன்னடன் ஒரேவீட்டில் வசிப்பவர்களுடன் கூடப் பேசுவதற்கு நேரமில்லை என்றுஇருக்கின்றனர். ஒருவருக்கு நல்ல கருத்துக்களைக் கூறுவதற்குச் சிலர்தான்இருப்பார்கள். சிலர் பல்வேறு விதமான முயற்சிகளிலும் ஈடுபட்டுதோல்வியடையும்போது, “நான் மாவு விக்கப் போனா காத்தடிக்குது உப்பு விக்கப்போனால் மழை பெய்யுது?“ என்றும்“சாண் ஏறுனா முழம் சருக்கது“என்றும் பிறரிடம் புலம்பித் தீர்ப்பர். அதனைக் கேட்கும் நண்பர், “அதற்குக்கவலைப்படாதே“ என்று கூறி, ‘‘முயற்சி திருவினையாக்கும்“ என்றபழமொழியையும் கூறி, “விடாமுயற்சி வெற்றி தரும்“ என்பதனையும்எடுத்துரைத்து ஆறுதல் கூறுவார்.
அதற்கு வந்தவர், “அட நீங்க வேற என் மனசே சரியில்லை. நான் யாரிடம்சென்று இனிமேல் உதவி கேட்பேன்?“ என்று வினவும்போது, அவரது நண்பர், “இதோ பாருங்கள், “மனமிருந்தால் மார்க்கம் உண்டு“ நல்லா சிந்தித்துப்பாருங்கள் ஏதாவது ஒருவழி பிறக்கும்“ என்றும் “யாரும் உதவவில்லை என்றாலும் நீங்களே முயற்சி செய்து பாருங்கள்“ என்று எடுத்துரைத்து, “தன் கையே தனக்குதவி“, அதுமட்டுமில்லை, “கையை ஊன்றித்தான் கரணம் (குட்டிக்கரணம்) போடணும்“ என்ற பழமொழிகளையும் கூறி அவருக்கத் தன்னம்பிக்கை ஊட்டுவார்.
வந்தவர் சரி, “நான் எந்த்த் தொழிலைத் தொடங்குவது?“ என்று தனதுநண்பரிடம் கேட்கும்போது, இதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்களுக்குஎந்த்த் தொழில் நன்றாகத் தெரியுமோ அந்தத் தொழிலைச் செய்யுங்கள்“ என்றுகூறுவார். மேலும் இதோ பாருங்கள்,
“தெரிந்த தொழிலை விட்டவணும் கெட்டான், தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்“
என்று நமது பெரியோர்கள் கூறுவர். அதனால் உங்களுக்குத் தெரிந்ததொழிலையே செய்யுங்கள்“ என்று கூறி அவரை ஊக்கப்படுத்தி வீட்டுக்கு அனுப்புவார்.
மேற்கூறிய பழமொழிகள் வாழ்வில் தொடர் தோல்விகள் ஏற்பட்டாலும்தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையும், மனம்வைத்து சிந்தித்துப் பார்த்தால் வாழ வழி கிடைக்கும் என்பதையும், தன்முயற்சியும் தெரிந்த தொழிலை விடாது செய்யும் திறனும் வேண்டும்என்பதையும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. முயற்சி வாழ்வில்மலர்ச்சியைத் தரும் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனையையும் இப்பழமொழிகள் நமக்குத் தருகின்றன.
முயற்சி செய்பவன் என்றும் தோல்வி அடைவதில்லை என்தனைஇப்புழமொழிகள் வலியுறுத்துவதுடன் என்ற அரிய வாழ்வியல் உண்மையையும் தெளிவுத்துகின்றன.
துணிவு
வாழ்வில் துணிவு என்பது அனைவருக்கும் வேண்டும். துணிவை, ‘துணிச்சல்‘என்று வழக்கில் கூறுவர். “துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாதுதம்பி“ என்று திரைப்படப் பாடலொன்று கூறுகின்றது. துணிவுதான் வாழ்க்கையில் ஒருவன் முன்னேறுவதற்கு முதல் அடிப்படையாக அமைகிறது.
“துணிவே துணை“,
“துணிந்தவனக்குத் துக்கமில்லை“,
“சாகத் துணிந்தவனுக்குச் சாகரம் முழங்கால் மட்டம்“
போன்ற பழமிகள் மனிதனுக்குத் துணிவு தேவை என்று எடுத்துரைக்கின்றன. துணிவு மனதில் விமையை ஏற்றுகிறது. மனவலிமை செயலைச் செய்வதற்குஉறுதுணையாக இருக்கின்றது. இவை ஒன்றோடொன்று சேரும்போது வெற்றி என்பது ஒருவனுக்கு வாய்க்கிறது.
முயற்சி+மனவலிமை+செயல்= வெற்றி
என்ற சமன்பாட்டில் இதனை அடக்கிக் கூறலாம். முயற்சி, துணிவுமனவலிமை, செயல் ஆகியவை ஒருங்கிணைந்தால் வாழ்வில் ஒருவன் வெற்றியடையலாம். என்ற வாழ்வியல் முன்னேற்றக் கருத்தினை மேற்கண்டபழமொழிகள் நமக்கு வலியுறுத்துகின்றன.
உழைப்பு
மக்களின் வாழ்க்கையை, உலகை, உருவாக்கியதும், உருவாக்குவதும், மேம்பாட்டையச் செய்வதும் உடைப்பே ஆகும். உழைப்பவர்களுக்கே இவ்வுலகம் சொந்தமானது. உழைக்காதவர்களைச் சோம்பேறிகள் என்றுகூறுவர். உழைப்பை வலியுறுத்தி பல பழமொழிகள் நம் தமிழக்தில் வழங்கயப்பட்டு வருவது நோக்கத்தக்கது.
“பத்துவிரல்ல பாடுபட்டு அஞ்சு விரல்ல அள்ளித் தின்ன வேண்டும்“
என்ற பழமொழி எழைப்பின் தன்மையைக் கூறி,உழைத்தால் மட்டுமே உலகில் உணவு கிடைக்கும், சுயமாக உழைத்து அதில் கிடைக்கும் வருவாயில்உண்டால் மிகுந்த மகிழ்ச்சியடையலாம் என்பன போன்ற கருத்துக்களையும் எடுத்துரைக்கின்றது எனலாம்.
உழைக்கின்ற நேரத்தில் உழைத்தல் வேண்டம். உழைக்காதிருந்தால் வாழ்வில் வெறுமையே மிஞ்சும். இதனை,
“உழுகின்ற நேரத்தில் ஊருக்குப் போயிட்டு அறுக்கிற நேரத்தில் அரிவாளுடன் வந்த கதைதான்“
என்ற பழமொழி அறிவுறுத்துகின்றது. அனைவரும் உழைக்கும்போது நாமும் உழைத்தல் வேண்டும் என்ற வாழ்வியல் முன்னேற்றக் கருத்தை இப்பழமொழி உள்ளடக்கமாகக் கொண்டமைந்துள்ளது.
சோம்பல் கூடாது
சோம்பல் வறுமையைக் கொடுக்கும், வாழ்வைக் கெடுக்கும், வளர்ச்சியைத்தடுக்கும். ஔவையாரும், “சோம்பித்திரிவர் தேம்பித் திரிவர்“ என்றுகுறிப்பிடுகின்றார். உழைக்காமல் இருந்தால் வாழ்வானது தேங்கிக் கிடக்கின்றசாக்கடையாக மாறிவிடும். உடைத்தால் வாழ்வு ஆறு போன்று விரியும். சோம்பலுடன் இருத்தல் கூடாது என்பதனை,
“இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை“
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. இளமைக்காலமே உடைப்பதற்குரியஏற்ற காலம். பின்னர் உழைக்கலாம் என்று ஒத்திப் போட்டால் அது வயது ஏறிமுதுமையடைந்த பின்னர் வறுமையில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் தான் நமது பெரியோர்கள் இளமையில் சோம்பேறியாக இருத்தல்கூடாது. அது பின்னாளில் வறுமையென்ற துயரைத் தரும் என்றுபழமொழியில் புகுத்தி எடுத்துரைத்தனர்.
கல்வி
முயற்சி, உழைப்பு, சோம்பலின்மை இவற்றுடன் கல்வியும் ஒருவனிடம்இருப்பின் அவனது வாழ்வு வளம்பெறும். கல்வி மனிதனைமனிதாக்குகின்றது. கல்லாமல் இருப்பது வாழ்க்கையை நரகத்திற்குஉள்ளாக்கும். ஒருவனுக்கு உண்மையான சொத்து கல்வியே. கல்வி ஒருவனைக் காலமெல்லாம் கலங்காது காப்பாற்றும் இன்பப் பூங்காவாகும்.. இத்தகைய அருமை வாய்ந்த கல்வியை இளம் வயதில் கற்றுத் தேரவேண்டும். அவ்விளம் வயதே கற்கும் பக்குவமான பருவமாகும். இதனை அறிந்தே நமதுமுன்னோர்,
“இளமையில் கல்“
என்று முன்மொழிந்துள்ளனர். இளமையில் என்னால் கல்வி கற்க முடியாது, நான் பெரியனாக வளர்ந்தபின் படிக்கின்றேன் என்று கூறி ஒருவன் கல்விகற்காமலிருந்துவிட்டால் வயதானபோது வாழ்வில் அவன் துன்புறநேரும். வயதானபோது படிக்க்க் கருதினால் அவனுக்கு உடலும், மனமும், சூழலும் ஒத்துழைக்காது. அதனால்தான் நமது முன்னோர்கள்,
“ஐந்தில் வளையாத்துஐம்பதில் வளையும்?“
என்ற பழமொழியினைக் கூறி கல்வியனைக் கற்பதற்கு வலியுறுத்தினர்எனலாம்.
காலமறிதல்
அந்தந்தக் காலத்தில் நாம் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்ய வேண்டும். காலம் அறிந்து செயல்படாதிருப்பின் அது கையாலாகாத்தனத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இதனைஅறிந்தே நமது முன்னோர்கள்,
“பருவத்தே பயிர்செய்“
என்று கூறினர். இளம்பருவத்திலேயே பயில வேண்டியதைப் பயின்றுவாழ்வை வளமாக்கிக் கொள்ள வேண்மு. மேலும் காலம் போனால் வராது. உயிர் போன்றது. உயிர் போனால் எங்ஙனம் வராதோ அதுபோல் உரிய காலம்போனால் மீள அது வராது. இதனை,
“காலம் பொன் போன்றது, கடமை கண்போன்றது“
என்று நமது முன்னோர் கூறி வைத்தனர்.
இளம் வயதிலேயே ஓடி ஆடி உழைத்து வாழ்விற்கு வேண்டியதைச் சேர்த்துவைத்துக் கொள்ள வேண்டும். அது வறுமையிலிருந்து ஒருவனைக்காப்பாற்றும். அவ்வாறின்றி ஒருவன் வாழ்ந்தால் அவனது வாழ்வு தீயின்முன்வைத்த வைக்கோல் போர் போன்றுஅழிந்துவிடும். இத்தகைய அரியதன்முன்னேற்றக் கருத்தினை, காலத்தை வீணாக்காது இருக்க வேண்டியஅரிய செய்தியினை, “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்“ என்ற பழமொழிதெளிவுறுத்துகின்றது. காற்று-வாய்ப்பு, தூற்றுதல்-பயன்படுத்திக் கொள்ளல். வாய்ப்புகள் வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில்முன்னேற வேண்டும் என்ற அரிய சிந்தனையை இப்பழமொழி எடுத்துரைத்துஅனைவருக்கும் வாழ வழிகாட்டுகின்றது.
பழமொழிகள் பண்பாட்டுப் பெட்டகங்கள். வாழ்வை வளமாக்கும் வாழ்வியற்களஞ்சியங்கள். அத்தகைய முன்னோர் மொழிந்துள்ள அருஞ்செல்வத்தைநாம் போற்றிக் காப்பதோடு அவை கூறும் வழியில் நல்வாழ்வு வாழ்ந்துவாழ்க்கையை வளமாக்கிக் கொள்வதும் நமது கடமையாகும்.
நன்றி
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
No comments:
Post a Comment