Tuesday, June 14, 2011



பழநியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய, சங்ககால தானியக்குதிர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பழநி சங்கிலித்தேவர் சந்து பகுதியில், சித்ராஅழகேசன் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இங்கு வீடு கட்டுவதற்காக, நேற்று அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. அப்போது ஒரு பகுதியில் குழிபோன்ற அமைப்பு தென்பட்டது. உள்பகுதி சற்று அகலமாகவும், அதிக நீளத்துடன் காணப்பட்டது. மேலும் சேதமடைந்த நிலையில் பழங்கால மண்பாண்ட ஓடுகள் கிடைத்தது. இதையடுத்து தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில், ""எட்டு அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட வெற்றிடக் குழியாக உள்ளது. முட்டை வடிவிலான இக்குழியைச் சுற்றிலும்,தட்டையான கற்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேல்பகுதியில் ஒரு அடி தடிமன் கொண்ட, கல் மூடி போன்ற அமைப்பு காணப்படுகிறது. இக்குழியின் மேல்வாய் தரையில் இருந்து நான்கடி ஆழத்தில் துவங்குவதால், சங்ககாலம் என உறுதிப்படுத்தலாம். இப்பகுதியில் கிடைத்த மண்பாண்ட ஓடுகள், 2000 ஆண்டுகளுக்கு முன்(சங்ககால) பயன்பாட்டில் இருந்தவை. விளிம்பு பகுதியில் கலைநயத்துடன் கூடிய வரிவடிவம், குடுவை போன்ற அமைப்புடன் உள்ளது. தானியக்குதிராக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இருப்பினும் வெள்ளைச்சோளம், மல்லிகைச் சோளம், இறுங்கச்சோளம், செஞ்சோளம் உள்ளிட்ட ஆறுவகைகள் மட்டுமே பதனப்படுத்தி வைப்பர். பிற தானியங்களை, இதில் பதனப்படுத்த முடியாது. 40 முதல் 50 மூடை சோளம் நிரப்பும் வகையில் குழியமைவு உள்ளது. வைக்கோலை பரப்பி, அதன்மீது சோளத்தை நிரப்புவர். பின்னர் புங்கை மர இலைகள் பரப்பி, மணலால் மூடி விடுவர். பூச்சி தாக்குதல், மழையால் ஈரப்பதம் அடைதல், கெட்டுப்போதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும். உணவு தேவையின்போது, இவற்றை எடுத்து பயன்படுத்துவர். இருப்பினும் மீத்தேன் உள்ளிட்ட வாயுக்களால், தானியத்தை எடுக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தவிர்க்க குழிக்குள் இறங்கும் முன்பும், மேலே வந்த பின்பும், சம்பந்தப்பட்ட நபர் சுக்கு, கருப்பட்டி உண்டபின் இப்பணியில் ஈடுபட்டிருப்பார். 1930க்குப் பின் பதனப்படுத்தலில் நாகரிக வளர்ச்சி காரணமாக, "தானிய குதிர்' முறை அழிந்து விட்டது. இவ்வாறு நாராயண மூர்த்தி தெரிவித்தார்.

நன்றி தினமலர் .

No comments: