செஞ்சி அருகே, புதிய சமண படுக்கைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் சமணம் குறித்து ஆய்வு செய்து வரும் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா வரிக்கல் கிராமம் அருகே உள்ள, சிவகிரி குன்றில் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், பழமையான சமண படுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அவர் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து அனந்தபுரம் செல்லும் வழியில், வரிக்கல் கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு தென் கிழக்கில் 2 கி.மீ., தூரத்தில், சிவகிரி எனும் குன்று ஒன்று உள்ளது.இந்த குன்றின் தெற்கு பகுதியில் 50 அடி நீளமும், 30 அடி உயரமும் கொண்ட இயற்கையான குகை காணப்படுகிறது. இதன் உள்பகுதியில் நடுவில் சுவர் எழுப்பி இரண்டாக பிரித்து, கிழக்கு பகுதியில் சிவலிங்கம் வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த ஏற்பாட்டை பிற்காலத்தில் செய்துள்ளனர்.மேற்கே உள்ள குகை பகுதியில், மூன்று இடங்களில் சமண படுக்கைகள் காணப்படுகின்றன.
குகையின் தெற்கில், கிழக்கு நோக்கி ஐந்து படுக்கைகளும், மேற்கில் வடக்கு நோக்கி ஐந்து படுக்கைகளும், கிழக்கில் வடக்கு நோக்கி ஒரு படுக்கையும் காணப்படுகிறது.குகையின் உள்பகுதியில் ஒரு இருக்கையும், வடக்கு நோக்கி உள்ள படுக்கையின் முடிவில், ஒரு குழியும் காணப்படுகிறது. குன்றின் முகப்பில், மூன்று நீர் வடி விளிம்பை செதுக்கியுள்ளனர். அனைத்து படுக்கைகளிலும் தலைத்திண்டு அமைத்துள்ளனர்.
குகையின் தென் மேற்கில் 47 செ.மீ., உயரத்தில் செவ்வக வடிவ மேடையை அமைத்துள்ளனர். இந்த மேடை, பிற்காலத்தில் அமைத்துள்ளனர். மேடைக்கு கீழ் பகுதியில் மேலும் படுக்கைகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த குன்று பகுதியில், கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. எனவே, இந்த சமண படுக்கைகள், 2,000 ஆண்டுகளுக்கு முந்தையனவாக இருக்க வேண்டும்.இந்த குன்றிற்கு, திருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்த ஞானியார் அடிகள், பல முறை வருகை புரிந்து தவம் மேற்கொண்டுள்ளார்.
குன்றின் நான்கு பக்கமும் பெருங்கற்கால சின்னங்களில் ஒன்றான கல்திட்டைகளும், கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் காணப்படுகின்றன. குன்றின் கீழ் பகுதியில், மேற்கே சிறிய பாதங்களை கல்லில் செதுக்கி வைத்துள்ளனர். இதை இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். குகையின் கிழக்கில் நீர் சுனையும், மேல் பகுதியில் பழமையான கோவில் ஒன்றும் சிதைந்த நிலையில் உள்ளன.இந்த இடத்தில் சமண படுக்கைகள் இருப்பது இந்த ஆய்வில் முதன் முறையாக தெரியவந்துள்ளது.இவ்வாறு ஆய்வாளர் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
நன்றி
தினமலர் - மே 03,2011
No comments:
Post a Comment