Thursday, June 2, 2011

தமிழ்மொழியின் சிறப்பு

ஒரு நாட்டைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ அல்லது ஒரு அரசாட்சியைப் பற்றியோ முழுமையாக அறிய வரலாறுகள் உதவுகின்றன. அவ்வரலாறு, உண்மை வரலாறு அமைவதற்குச் சான்றுகள், அதாவது தக்கதோர் உண்மை ஆதாரங்கள் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அப்படி உண்மையான, பொருத்தமான ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் வரலாற்றை (True Written History) உண்மை வரலாறு லப்படுத்தும் ஆதாரங்களையும் பயன்படுத்தி எழுதப்படாதவற்றை (False Histroy) பொய் வரலாறு அல்லது (False story) பொய்க் கதைகள் என்றே கூறவேண்டும்.

இப்பகுதியில் நாம் தெரிய வேண்டிய உண்மைகள் இரண்டே!. ஒன்று தமிழ் மொழிவரலாறு. இரண்டு தமிழின் வரலாறு. இவ்விரு வரலாறுகளைக் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் அறியவேண்டும், தெரிய வேண்டும். தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வுண்மை வரலாற்றைப் படைக்கிறேன்.

நம் தாய் மொழியாகிய தமிழைப் பற்றிய தமிழரினத்தைப் பற்றியும் தெரிய பல உண்மை வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

1, பழங்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்கள்
2. நடுகற்களில் காணப்படும் வட்டெழுத்துக்கள்
3. செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்துக்கள்
4. இலக்கியச் சான்றுகள்
5. வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள்
6. பழைய நாணயங்கள்
7. அரசு சாசனங்கள்
8. அரசர்களின் ஆவணங்கள்
9. கலைகள் – (இயல், இசை, நாடகம்)
10. கோயில் ஒழுங்குகள், கட்டிடக்கலைகள் மற்றும் சிற்பங்கள்.

இது போன்ற சான்றுகள் பல பல உள்ளன. தமிழைத் தெரிய தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும், உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஆதாரங்கள் மிதமிஞ்சி கிடக்கிறது.

தமிழ்மொழி மிக மிகத்தொன்மை வாய்ந்த மொழி. இத்தமிழ் மொழிக்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றியது என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. இக்காலத்தில்தான் தோன்றியது என்று திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு தமிழின் உண்மை வரலாற்றை ஆய்வோம். தொன்மை காலத்தில் அதாவது பழங்காலத்தில், நாம் இன்று கையாளும் தமிழ் எழுத்தல்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களில் தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

அவைகள்:

1, தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி
2. வட்டெழுத்துக்கள்
3. கோலெழுதுக்கள் மற்றும்
4. மலையாண்மை,

என்பவைகளாம், இவற்றுள் தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி எழுத்து முறைதான் மிக மிகத் தொன்மையானது. அசோகமன்னர் தன் கல்வெட்டுக்களில் பயன்படுத்திய எழுத்து பாலி மற்றும் பிராமியே என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

முதல் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள்

தமிழ் நாட்டில் முதன் முதலில், 1906 ஆம் ஆண்டில் ஒரு ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள மருகால்தலை என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள குன்றில் தமிழ் பிராமி வட்டெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிச் செய்திகள் அடங்கியுள்ளன என்று 1924ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் எடுத்துரைத்தவர் திரு.கே.வி. சுப்ரமணிய அய்யராவார்.

அடுத்து வந்த அறிஞர்களின் சேவைகள்

1) திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் அனைத்தையும் நன்கு படித்து, எழுத்துக்களை வரிசைப்படுத்தி தெளிவான கருத்துக்களைக் கூறியுள்ளார்.

2) ஒரு காலத்தில் இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் பரவியிருந்த மொழி தமிழ்ப் பிராமி ஒன்றே என்கிறார்.
3) தமிழ்ப் பிராமி எழுத்து முறைக்கும் செமிட்டிக் எழுத்துமுறைக்கும் மிக நெருங்கிய தொடர்பும், எழுத்தொற்றுமையும் மிக அதிகமாக்க் காணப்படுவதால் செமிட்டிக் மொழியைக் கையாளும் பினீசியர்களுக்கும், தமிழ்ப் பிராமி முறையைக் கையாளும் திராவிடர்களுக்கும் 4000 ஆண்டுகளுக்கும் முன்பே வர்த்தகத்தொடர்புகள் உண்டு என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

4) சிந்துச் சமவெளியில் இரு பெருநகரங்களாகி மொகஞ்சதாரோ, அரப்பா போன்ற நகர நாகரிகங்களைப் படைத்தவர்கள் திராவிடர்களே! என்றும் சிந்துச் சமவெளியில்பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும் திராவிடர்களின் மொழியும் எழுத்தும் ஒன்றே என்று திரு. ரெ.வ. ஹீராஸ் என்னும் வரலாற்று மேதை கூறுகிறார்.

5) இதே கருத்தை சர்.ஜான்மார்ஸல் என்ற அறிஞரும் வலியுறுத்துகிறார்.

6) மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிக் ஆதிதிராவிடப் பழங்குடியினருக்குச்சொந்தமானது என்று, இரகசிய அறிஞர்களாகிய திரு. ஜ.எம்.போங்கார்டு லெவின் மற்றும் திரு. என்.வி. குரோ போன்றோர் கருதுகின்றனர்.

7) கி.மு. 3ம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகனின் ‘கிர்னார்’ கல்வெட்டில் அன்றைய தமிழகத்து அரசுகளையும் அரசியல் செய்திகளையும் அரசர்களின் பெயர்ப் பட்டியலையும் இன்றும் கூட காணலாம்.

8)நந்தி வர்ம பல்லவ மன்னனுடைய கல்வெட்டென்று தமிழ் மன்னர்களை திராவிட மன்னர்கள் என்று கூறுகிறது.

9) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினோசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் Dr. R.R. தீட்சிதர்.

10) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினேசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் கால்டுவெல் தன் (Comparative grammer of Dravidian Languages) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில்….

11) தமிழ்ப் பிராமி எழுத்துமுறை கிறிஸ்து பிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கத்திலிருந்தது என்கிறார் திரு ஐராவதும் மகாதேவன் அவர்கள். மேலும் அவர், தமிழ்ப் பிராமியைப் பற்றிக் கூறுகையில் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளள பானை ஓடுகளிலுள்ள தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் அதன் வளர்ச்சிக்குத் தக்க சான்றாகும். என்கிறார்.

12) கி.பி. 3ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் பிராமியிலிருந்து, வட்டெழுத்துகளும் தமிழ் எழுத்துக்களும் காலப்போக்கில் பிரிந்து தனித்தன்மை பெற்றதாக டாக்டர், நாகசாமி கூறுகிறார்.

13) ரோம் நாட்டுப் பொற்காசுகள், வெள்ளிக்காசுகளின் துணைகொண்டு, கிறிஸ்துபிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியும் தமிழனும், யவன நாடு, சீனதேசம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்ப்பும், வாணிகத் தொடர்பும் வைத்திருந்தனர் என்பது தெளிவாகிறது.

14) சின்னமனூர் செப்பேடுகளும், வேள்விக்குடிச் சாசனமும் சங்க கால மன்னர்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் காட்டுவதுடன் சங்கங்களின் வரலாற்று மரபை உறுதி செய்கின்றன. அவ்வண்ணமே! தொல்காப்பியம், பட்டினப்பாலை, மருதைக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற இலக்கிய ஆதாரங்கள் தக்கதோர் புறச்சான்றுகளாக உள்ளன. மேலும் பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலத்துக் காசுகளும் தமிழ்மொழியைக் கையாண்ட தமிழர்களின் சிறப்பைப் பறைசாற்றிய வண்ணமுள்ளது.

உண்மை வரலாறு

தமிழனின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் ஒன்றே. குமரிக்கண்டத்தில், கையாண்ட மொழி தமிழ்த் திராவிட மொழியே, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சகட்டமெட்டினர். பழம்பாண்டி நாட்டை உலகிற்கு சுட்டிக்காட்டி சிறப்புடன் வாழ்ந்த்னர். தமிழ் மொழி சீரும் சிறப்பும் பெற்றுத் தழைத்தோங்கியது.

புகழ்க்கொடி நாட்டியது

குமரிக் கண்டத்தைத் தன் தாயகமாகக்கொண்ட திராவிடத் தமிழன் உலகின் பல பகுதிகளுக்கும் பரவலானான். தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் வாணிகத்தை மேற்கொண்டான். ஆங்காங்கே குடியிருப்புகளை உருவாக்கி உலகெங்கும் நிலைத்தான். நான்குமுறை ஏற்பட்ட கடல்கோள்களால் தமிழனின் புகழும் நாடும் மொழியும் அழிவுற்றன. தென்மதுரை,நாகநன்நாடு, கபாடபுரம், காவிரிப்பூம்பட்டினம் அனைத்துமே அழிந்து நாசமாகியது.

முக்கியக் குறிப்பு

இதிலிருந்து நாம் தெரிவது என்னவென்றால் திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது என்பதே! அதாவது தெற்கே குமரிக்கண்டம் என்னும் பெருநகர நாகரித்தைப் படைத்த தமிழ்த் திராவிடன் வடக்கிலும் இருபெரும் துணை நகரங்களாக மொஞ்சதாரோ, அரப்பாவை அமைத்து வாழ்ந்தான் என்பதே! இதிலிருந்து தமிழன் பெருமைகளையும் தமிழ்மொழியின் பெரும் சிறப்பையும் நன்கு உணரலாம்.


நன்றி http://www.tamileluthu.org

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.

பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.

பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தூவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.

ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.

குமரிமாந்தரின் மொழியற்ற நிலை
“சைகை மொழி” – Sign Language.

குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம்.

இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 – 5,00,000

எழுத்தும், உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி (Natural Language) இயற்கை மொழியாம், இம்மொழியை “முழைத்தல் மொழி” (Gesture Language – or Sign Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8 வகைப்படும். அவை

1. உணர்ச்சியொலிகள் (Emotional Sounds)
இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.

2. விளியொலிகள் (Vocative Sounds) பிறரை
விளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.

3. ஒப்பொலிகள் (Imitative Sounds)
இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.

4. குறிப்பொலிகள் (Symbolic Sounds) வழக்கப்படி
கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.

5. வாய்ச் செய்கையொலிகள்
வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.

6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)
குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.

7. சுட்டொலிகள் (Decitive Sounds)
சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.

8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு,
அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களை
எழுப்பும் ஒலிகள் எனப்படும்.

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000

மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech) என்கிறோம். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!

குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.

நான்கு பெருங் கடல் கோள்கள்

1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.

சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.

தொல்காப்பியம்

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.

மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்

1. பழந்தமிழ் (Ancient Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்

Early ancient Tamil (or) Proto Ancient Tamil

ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil

இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil

2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil

ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil

இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil

3. தற்காலத் தமிழ் (Modern Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil

ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil

முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil

திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.

திராவிட மொழிக் குடும்பம்

மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.
2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.
3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.

தமிழ்மொழியின் பெரும்புகழ்

திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.

இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.

தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு

உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது.

வரலாற்றுச் சான்றுகள்

வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.

தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள்

மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது மனிதன் என்று தோன்றினான்? உயிரின வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத் தோற்றம், அவற்றின் வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச் செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல் முதலில் தோன்றியது “டார்வினின் பரிணாமக் கொள்கையே” ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.

ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள்

ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே! இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர். தமிழ்மொழியின் தொன்மையையும், தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பின்வரும் பகுதிகளில் நன்கு அறிவோம்.

சார்லஸ் டார்வின்

இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்” வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)” போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும் “மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி” என்னும் நூலின் வாயிலாக குமரிமாந்தனையும், மனித இன பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது.


நன்றி http://www.tamileluthu.org